1171-1180

                                                                    கண்விதுப்பழிதல்

குறள் எண்: 1171

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் 

தாம்காட்ட யாம்கண் டது.

உரை :

தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?

குறள் எண்: 1172

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் 

பைதல் உழப்பது எவன்.

உரை :

ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?

குறள் எண்: 1173

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் 

இதுநகத் தக்க துடைத்து.

உரை :

அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.

குறள் எண்: 1174

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா 

உய்வில்நோய் என்கண் நிறுத்து.

உரை :

என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன.

குறள் எண்: 1175

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் 

காமநோய் செய்தஎன் கண்.

 உரை :

அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.

குறள் எண்: 1176

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் 

தாஅம் இதற்பட் டது.

உரை :

எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!

குறள் எண்: 1177

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து 

வேண்டி அவர்க்கண்ட கண்.

உரை :

அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.

குறள் எண்: 1178

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் 

காணாது அமைவில கண்.

 உரை :

உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.

குறள் எண்: 1179

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை 

ஆரஞர் உற்றன கண்.

உரை :

காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கி‌டையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.

குறள் எண்: 1180

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் 

அறைபறை கண்ணார் அகத்து.

உரை :

அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று


Comments

Popular posts from this blog

1231-1240

1281-1290