1231-1240
உறுப்புநலனழிதல்
குறள் எண்: 1231
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.
உரை :
இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.
குறள் எண்: 1232
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.
உரை :
பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் (பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.
குறள் எண்: 1233
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.
உரை :
கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், (இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.
குறள் எண்: 1234
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.
உரை :
துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.
குறள் எண்: 1235
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.
உரை :
வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரி்ன கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.
குறள் எண்: 1236
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.
உரை :
வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.
குறள் எண்: 1237
பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.
உரை :
நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?
குறள் எண்: 1238
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.
உரை :
தழுவிய கைகளைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, (அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.
குறள் எண்: 1239
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.
உரை :
தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.
குறள் எண்: 1240
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.
உரை :
காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.
Comments
Post a Comment