1151-1160

                                                              பிரிவாற்றாமை

குறள் எண்: 1151

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் 

வல்வரவு வாழ்வார்க் குரை.

உரை :

பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால் எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில் உயிர்வாழ வல்லவர்க்குச் சொல்.

குறள் எண்: 1152

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் 

புன்கண் உடைத்தால் புணர்வு.

உரை :

அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது, இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது.

குறள் எண்: 1153

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் 

பிரிவோ ரிடத்துண்மை யான்.

உரை :

அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது.

குறள் எண்: 1154

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் 

தேறியார்க்கு உண்டோ தவறு.

உரை :

அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.

குறள் எண்: 1155

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் 

நீங்கின் அரிதால் புணர்வு.      

உரை :

காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.

குறள் எண்: 1156

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் 

நல்குவர் என்னும் நசை.

உரை :

பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால், அத்தகையவர் திரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.

குறள் எண்: 1157

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை 

இறைஇறவா நின்ற வளை.

உரை :

என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ.

குறள் எண்: 1158

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும் 

இன்னாது இனியார்ப் பிரிவு.

உரை :

இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது.

குறள் எண்: 1159

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல 

விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

உரை :

நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ.

குறள் எண்: 1160

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் 

பின்இருந்து வாழ்வார் பலர்.

உரை :

பிரிய முடியாத பிரிவிற்கு உடன்பட்டு, (பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும், விட்டு பிரிந்த பின் பொருத்திருந்து பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.


Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290