1161-1170

                                                                  படர்மெலிந்திரங்கல்

குறள் எண்: 1161

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு

ஊற்றுநீர் போல மிகும்.

உரை :

இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது.

குறள் எண்: 1162

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு 

உரைத்தலும் நாணுத் தரும்.

உரை :

இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.

குறள் எண்: 1163

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் 

நோனா உடம்பின் அகத்து.

உரை :

துன்பத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருப்பக்கமாக தொங்குகின்றன.

குறள் எண்: 1164

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் 

ஏமப் புணைமன்னும் இல்.

உரை :

காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான ‌தோணியோ இல்லை.

குறள் எண்: 1165

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு 

நட்பினுள் ஆற்று பவர்.

உரை :

(இன்பமான) நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். (துன்பம் தரும் பகையை வெல்லும்) வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?

குறள் எண்: 1166

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் 

துன்பம் அதனிற் பெரிது.

உரை :

காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.

குறள் எண்: 1167

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் 

யாமத்தும் யானே உளேன்.

உரை :

காமம் என்னும்‌ வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.

குறள் எண்: 1168

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா 

என்னல்லது இல்லை துணை.

உரை :

இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.

குறள் எண்: 1169

கொடியார் கொடுமையின் தாம்கொடிய விந்நாள் 

நெடிய கழியும் இரா.

உரை :

(பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை.

குறள் எண்: 1170

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் 

நீந்தல மன்னோஎன் கண்.

உரை :

காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என்‌ கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290