1191-1200

                                                                 தனிப்படர்மிகுதி

குறள் எண்: 1191

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே 

காமத்துக் காழில் கனி.

உரை :

தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.

குறள் எண்: 1192

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு 

வீழ்வார் அளிக்கும் அளி.

உரை :

தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.

குறள் எண்: 1193

வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே 

வாழுநம் என்னும் செருக்கு.

உரை :

காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் (பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும்.

குறள் எண்: 1194

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் 

வீழப் படாஅர் எனின்.

உரை :

தாம் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர்.

குறள் எண்: 1195

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ 

தாம்காதல் கொள்ளாக் கடை.

உரை :

நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?

குறள் எண்: 1196

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல 

இருதலை யானும் இனிது.

உரை :

காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.

குறள் எண்: 1197

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் 

ஒருவர்கண் நின்றொழுகு வான்.

உரை :

(காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ?

குறள் எண்: 1198

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து 

வாழ்வாரின் வன்கணார் இல்.

உரை :

தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் (பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை.

குறள் எண்: 1199

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு 

இசையும் இனிய செவிக்கு.

உரை :

யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் ‌கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.

குறள் எண்: 1200

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் 

செறாஅஅய் வாழிய நெஞ்சு.

உரை :

நெஞ்சமே! நீ வாழி! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்! அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக.



Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290