1281-1290

                                                                     புணர்ச்சிவிதும்பல்

குறள் எண்: 1281

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் 

கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

உரை :

நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை; காமத்திற்கு உண்டு.

குறள் எண்: 1282

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் 

காமம் நிறைய வரின்.

உரை :

காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

குறள் எண்: 1283

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் 

காணா தமையல கண்.

 உரை :

என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.

குறள் எண்: 1284

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து 

கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.

உரை :

தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது.

குறள் எண்: 1285

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் 

பழிகாணேன் கண்ட இடத்து.

 உரை :

மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.

குறள் எண்: 1286

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் 

காணேன் தவறல் லவை.

உரை :

காதலரைக் யான் காணும்போது (அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை; அவரைக் காணாதபோது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.

குறள் எண்: 1287

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் 

பொய்த்தல் அறிந்தென் புலந்து.

உரை :

வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் என்ன?

குறள் எண்: 1288

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் 

கள்ளற்றே கள்வநின் மார்பு.

உரை :

கள்வனே! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்‌மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.

குறள் எண்: 1289

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் 

செவ்வி தலைப்படு வார்.

உரை :

காமம் மலரை விட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.

குறள் எண்: 1290

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் 

என்னினும் தான்விதுப் புற்று.

உரை :

கண் பார்வையின் அளவில் பிணங்கி, என்னை விடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, (பிணங்கிய நிலையையும் மறந்து) கலந்து விட்டாள்.


Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240