1201-1210

                                                            நினைந்தவர்புலம்பல்

குறள் எண்: 1201

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் 

கள்ளினும் காமம் இனிது.

உரை :

நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் (உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும்) கள்ளை விட காமம் இன்பமானதாகும்.

குறள் எண்: 1202

எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார் 

நினைப்ப வருவதொன்று ஏல்.

உரை :

தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.

குறள் எண்: 1203

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் 

சினைப்பது போன்று கெடும்.

உரை :

தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ?

குறள் எண்: 1204

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து 

ஓஒ உளரே அவர்.

உரை :

எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! (அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ?

குறள் எண்: 1205

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் 

எம்நெஞ்சத்து ஓவா வரல்.

உரை :

தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?

குறள் எண்: 1206

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான் 

உற்றநாள் உள்ள உளேன்.

உரை :

காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?

குறள் எண்: 1207

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் 

உள்ளினும் உள்ளம் சுடும்.

உரை :

(காதலரை) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?

குறள் எண்: 1208

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ 

காதலர் செய்யும் சிறப்பு.

உரை :

காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!

குறள் எண்: 1209

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் 

அளியின்மை ஆற்ற நினைந்து.

உரை :

நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.

குறள் எண்: 1210

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் 

படாஅதி வாழி மதி.

உரை :

தி்ங்களே! பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக!

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290