1221-1230

                                                          பொழுதுகண்டிரங்கல்

குறள் எண்: 1221

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் 

வேலைநீ வாழி பொழுது.

உரை :

பொழுதே! நீ மாலைக்காலம் அல்ல; (காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிந்து வாழும்) மகளிரின் உயிரை உண்ணும் முடிவுக் காலமாக இருக்கினறாய்!

குறள் எண்: 1222

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் 

வன்கண்ண தோநின் துணை.

உரை :

மயங்கிய மாலைப்‌பொழுதே! நீயும் எம்மைப்போல் துன்பப்படுகின்‌றாயே! உன் துணையும் எம் காதலர் போல் இரக்கம் அற்றதோ?

குறள் எண்: 1223

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் 

துன்பம் வளர வரும்.

உரை :

பனி தோன்றிப் பசந்த நிறம் கொண்ட மாலைப் பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.

குறள் எண்: 1224

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து 

ஏதிலர் போல வரும்.

 உரை :

காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது (என் உயிரைக் கொள்ள) வருகின்றது.

குறள் எண்: 1225

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் 

மாலைக்குச் செய்த பகை.

உரை :

யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப் பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?

குறள் எண்: 1226

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத 

காலை அறிந்த திலேன்.

உரை :

மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.

குறள் எண்: 1227

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி 

மாலை மலரும்இந் நோய்.

உரை :

இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.

குறள் எண்: 1228

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் 

குழல்போலும் கொல்லும் படை.

 உரை :

ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது.

குறள் எண்: 1229

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு 

மாலை படர்தரும் போழ்து.

உரை :

அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.

குறள் எண்: 1230

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை 

மாயும்என் மாயா உயிர்.

உரை :

(பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.


Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290