1241-1250

                                                                   நெஞ்சொடுகிளத்தல்

குறள் எண்: 1241

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் 

எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

உரை :

நெஞ்சே! (காதலால் வளர்ந்த) இத் துன்ப நோயைத் தீர்க்கும் மருந்து ஏதாவது ஒன்றை நீ நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயோ?

குறள் எண்: 1242

காதல் அவரிலர் ஆகநீ நோவது 

பேதைமை வாழியென் நெஞ்சு.

உரை :

என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!

குறள் எண்: 1243

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் 

பைதல்நோய் செய்தார்கண் இல்.

உரை :

நெஞ்சே (என்னுடன்) இருந்து அவரை நினைந்து வருந்துவது ஏன்? இந்தத் துன்பநோயை உண்டாக்கியவரிடம் இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை இல்லையே!

குறள் எண்: 1244

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் 

தின்னும் அவர்க்காணல் உற்று.

உரை :

நெஞ்சே! நீ அவரிடம் செல்லும்போது என் கண்களையும் உடன் கொண்டு செல்வாயாக; அவரைக் காணவேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

குறள் எண்: 1245

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் 

உற்றால் உறாஅ தவர்.

உரை :

நெஞ்சே! யாம் விரும்பி நாடினாலும் எம்மை நாடாத அவர் நம்மை வெறுத்து விட்டார் என்று எண்ணிக் கைவிட முடியும‌ோ?

குறள் எண்: 1246

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் 

பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.

உரை :

என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணர மாட்டாய்; பொய்யான சினங்கொண்டு காய்கினறாய்.

குறள் எண்: 1247

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே 

யானோ பொறேன்இவ் விரண்டு.

உரை :

நல்ல நெஞ்சே! ஒன்று காமத்தை விட்டு விடு; அல்லது நாணத்தை விட்டு விடு; இந்த இரண்டையும் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.

குறள் எண் : 1248

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் 

பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.

உரை :

என் நெஞ்சே! பிரிவுத் துன்பத்தால் வருந்தி அவர் வந்து அன்பு செய்ய வில்லையே என்று ஏங்கி பிரிந்தவரின் பின் செல்கின்றாய் பேதை.

குறள் எண்: 1249

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ 

யாருழைச் சேறியென் நெஞ்சு.

உரை :

என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?

குறள் எண்: 1250

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா 

இன்னும் இழத்தும் கவின்.

உரை :

நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.


Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290