1291-1300

                                                                     நெஞ்சொடுபுலத்தல்

குறள் எண்: 1291

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே 

நீஎமக்கு ஆகா தது.

உரை :

நெஞ்சே! அவருடைய நெஞ்சம் (நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?

குறள் எண்: 1292

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் 

செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

உரை :

என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!

குறள் எண்: 1293

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ 

பெட்டாங்கு அவர்பின் செலல்.

 உரை :

நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்‌க்கு நண்பர் இல்லை என்னும் எண்ண‌மோ?

குறள் எண்: 1294

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே 

துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

உரை :

நெஞ்‌சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?

குறள் எண்: 1295

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் 

அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

உரை :

(காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; (இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.

குறள் எண்: 1296

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் 

தினிய இருந்ததென் நெஞ்சு.

உரை :

காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.

குறள் எண்: 1297

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் 

மாணா மடநெஞ்சிற் பட்டு.

உரை :

காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்.

குறள் எண்: 1298

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம் 

உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

உரை :

உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது.

குறள் எண்: 1299

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய 

நெஞ்சந் துணையல் வழி.

உரை :

ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?

குறள் எண்: 1300

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய 

நெஞ்சம் தமரல் வழி.

உரை :

ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.


Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290