1311-1320

                                                                    புலவி நுணுக்கம்

குறள் எண்: 1311

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் 

நண்ணேன் பரத்தநின் மார்பு.

உரை :

பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் ‌பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.

குறள் எண்: 1312

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை 

நீடுவாழ் கென்பாக் கறிந்து.

உரை :

காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.

குறள் எண்: 1313

கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் 

காட்டிய சூடினீர் என்று.

உரை :

கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.

குறள் எண்: 1314

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் 

யாரினும் யாரினும் என்று.

உரை :

யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; ய‌ாரை விட? யாரை விட? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.

குறள் எண்: 1315

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் 

கண்நிறை நீர்கொண் டனள்.

 உரை :

இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.

குறள் எண்: 1316

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் 

புல்லாள் புலத்தக் கனள்.

உரை :

நினைத்தேன் என்று கூறி‌னேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.

குறள் எண்: 1317

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் 

யாருள்ளித் தும்மினீர் என்று.

உரை :

யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்?

குறள் எண்: 1318

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் 

எம்மை மறைத்திரோ என்று.

 உரை :

அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள்.

குறள் எண்: 1319

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் 

இந்நீரர் ஆகுதிர் என்று.

உரை :

ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று ‌சொல்லிச் சினம் கொள்வாள்.

குறள் எண்: 1320

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் 

யாருள்ளி நோக்கினீர் என்று.

உரை :

அவளுடைய அழகை நி‌னைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்வாள்.

Comments

Popular posts from this blog

1171-1180

1231-1240

1281-1290